திருப்பூர்: தமிழ்நாட்டை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதே தனது குறிக்கோள், அதற்கு பக்கபலமாக இருங்கள் என திருப்பூர் ஏற்றுமதி யாளர்களிடைய நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
2நாள் பயணமாக கோவை சென்றுள்ள முதல்வர் நேற்று பிற்பகல் திருப்பூரில் நடைபெற்ற அரசு விழா மற்றும் ஏறுமதியாளர்களுடனான கலந்துரை யாடல் உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
முன்னதாக, திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 28.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 41.24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளி களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, எரிசக்தித் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் 28.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 20 திட்டப் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டிய புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் குண்டடம் வட்டாரம், கொழுமங்குழி யில் 24 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் மற்றும் தாராபுரம் வட்டம், மாம்பாடி ஊராட்சி, புளியம்பட்டி கிராமத்தில் 16 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கக் கட்டடம், என மொத்தம் 41.24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில் மையம், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சமூகநலத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளின் சார்பில் 4,335 பயனாளிகளுக்கு 55.61 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக, திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
இவ்விழாவில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. சுப்பராயன், ஆ. ராசா, அ. கணேசமூர்த்தி, கு. சண்முகசுந்தரம், அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ்.வினீத், இ.ஆ.ப., திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் நலத்திட்டப் பணிகளைத் தொடர்ந்து, திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய கலந்துரையாடல் நிகழ்வில் , தமிழக ஏற்றுமதி தொழில் துறைக்கு 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தக இலக்கு நிர்ணயித்து, அதற்கான திட்டங்களை வகுத்தமைக்காக முதலமைச்சர் அவர்களுக்கு அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
மேலும், சென்னையில் 22.9.2021 அன்று நடைபெற்ற “ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னணியில் தமிழ்நாடு” – தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில், “தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை” வெளியிட்டது ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்கள். அத்துடன் தமிழ்நாடு அரசு, ஏற்றுமதியை ஊக்குவித்திட அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதையும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செய்து வருவதையும், தேவையான ஒப்பந்தங்கள் மற்றும் ஆணைகள் உடனடியாக பிறப்பிக்கப்படுவதையும், திறன் மேம்பாட்டு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதையும் பாராட்டினார்கள். இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு ஏற்றுமதி தொழில் துறைக்கு மேலும் ஊக்கமளிக்க வேண்டுமென்று ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டார்கள்.
இக்கலந்தாய்வு நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “உங்களுடைய நன்றிக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் சொன்ன பிரச்சனை மட்டுமல்ல, புதிய பிரச்சனைகள், தீர்க்க முடியாமல் இருக்கும் பல்வேறு பிரச்சனைகள், எதுவாக இருந்தாலும் எந்தநேரமும் இந்த அரசை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நம்முடைய தொழில் துறை அமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள், தொழில்துறை செயலாளர் இருக்கிறார், முதலமைச்சர் அலுவலகம் இருக்கிறது, என்னுடைய அலுவலகத்தை தொடர்பு கொண்டால் உடனடியாக அந்தச் செய்தியை என்னிடம் சேர்த்துவிடுவார்கள்.
எல்லோரும் தமிழ்நாடு சி.எம்-யை நம்பர் ஒன் சி.எம். என்று சொல்கிறார்கள். அதுபோல் தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலம் என்று சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் பக்கபலமாக இருந்து உங்கள் ஆதரவை தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் இயக்குநர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். வினீத், இ.ஆ.ப., அகில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத் தலைவர் டாக்டர் ஏ. சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.