சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. அதேபோல, அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத் துக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைத்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கிய நிலையில், தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலயா புறப்பட்டு சென்றார். அதே வேளையில் புதிய பொறுப்பு தலைமைநீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நேற்று சென்னை வந்தடைந்தார்.
இதையடுத்து, அவர் இன்று காலை மெட்ராஸ் உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமைநீதிபதியாக பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்ச்ர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச்செயலாளர் இறையன்பு, மூத்த வழக்கறிஞர்கள், உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அலகாபாத் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள முனீஸ்வர் நாத் பண்டாரி கடந்த 1960ம் ஆண்டு செப்டம்பர் 13ம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். பின்னர், சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பதிவுச் செய்த பண்டாரி, சிவில், கிரிமினல், தொழிலாளர் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர். ராஜஸ்தான் அரசின் பல்வேறு வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தி துறையின் வழக்கறிஞராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை 5ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்ற இவர் பின்னர் 2019ஆம் ஆண்டு அலகாபாத்தில் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பணிகளை கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை கவனித்து வந்தார். இந்நிலையில், முனீஸ்வரன் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர் இன்று பதவி ஏற்றார்.
மெட்ராஸ் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவ ஏற்றுள்ள முனீஸ்வர் நாத் பண்டாரி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வுபெறுவார்.