அயோத்தி: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதை முன்னிட்டு அயோத்தியில் இன்று இரவு 12 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவின் புராதன பண்டிகைகளில் தீபாவளிக்கு தனிச்சிறப்பு உண்டு.  இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகை தான் தீபாவளி.. நமக்குள் இருக்கும் இறைவன் ஜோதி வடிவாக  இருக்கிறார் என்பதை உணர்ந்தும் இந்த பண்டிகையின்போது வீடுகள், கோவில்களில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம்.   இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அயோத்தி சரயு நதிக்கரையில் இன்று 12 லட்சம் விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று, அதன்மூலம் சீதையை களவாடிச் சென்ற  ராவணனை தோற்கடித்து, சீதையை மீட்டு மீண்டும்  அயோத்திக்கு திரும்பும் ராமர், சீதையை வரவேற்கும் வகையில்  சரயு நதிக்கரையில் காலங்காலமாக  தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, இன்று இரவு அயோத்தியில் ஓடும் சரயு ஆற்றங்கரையில் உள்ள படித்துறைகளில் 9 லட்சம் விளக்குகளும், நகரின் மற்ற இடங்களில் 3 லட்சம் விளக்கு களும் என மொத்தம் 12 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. இதன்மூலம் புதிய சாதனை படைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த விழாவில் உ.பி. மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கலாசாரத்துறை மந்திரி கிஷன் ரெட்டி மற்றும் மாநில அமைச்சர்கள்  கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சியின்போது,  நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, ராமாயண சம்பவங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள் ஊர்வலம், ராமலீலா, லேசர் ஷோ ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

பிரமாண்டமான தீபத்ஸவ விழாவை முன்னிட்டு ‘ஷோபா யாத்திரை’யை துணை முதல்வர் தினேஷ் சர்மா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.