சென்னை: வங்கி கடனை திருப்பி கட்டாததால், நடிகர் ஓய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தியின் சென்னை வீடு ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. அதற்கான விளம்பரத்தை கடன்கொடுத்த நிதி நிறுவனமான இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுவந்திபாஜகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார்.
பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்குத் தெருவில் வசிந்து வந்தார். இவரது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை வாங்குவதற்காக கடந்த 2016ல் ‛இந்துஜா லைலண்ட் பைனான்ஸ்’ என்கிற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடி கடனாய் பெற்றார். அதற்கு செலுத்த வேண்டிய மாத தவணையை சில மாதங்கள் மட்டும் செலுத்திய மதுவந்தி, அதன் பின் முறையாக தவணை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்ட நிதிநிறுவன அதிகாரிகளிடமும் முறையாக பதில் தெரிவிக்கவில்லை. இதனால் நிதிநிறுவனம் சார்பில் மதுவந்தி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 2018 ல் மதுவந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணைக்கு மதுவந்தி சரியான முறையில் ஒத்துழைக்காத நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், இறுதியில், மதுவந்தி நிதி நிறுவனத்தில் வாங்கிய ரூ.1 கோடி கடனுன் அதற்குரிய வட்டியும் சேர்த்து 1.22 கோடி கடனை திரும்ப செலுத்தாததால், நிதி நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், மதுவந்தி வீட்டை பூட்டி சீல் வைக்கும்படி உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, அக்டோபர் 14ந்தேதி மதுவந்தியின் அடுக்குமாடி வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது அவரது வீடு ஏலத்திற்கு வந்துள்ளது. சொத்தின் அடிப்படையில் அந்த வீட்டின் விலையாக ரூ.1.50 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்கு பெற ரூ.15 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஏலத்திற்கு வரும் சொத்தின் அடிப்படையில் அந்த வீட்டின் விலையாக ரூ.1.50 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுவந்தி பிரபல நடிகர் ரஜினிகாந்துக்கும் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.