சென்னை: தீபாவளியையொட்டி போக்குவரத்துத்துறைக்கு வழங்கப்படும் இனிப்புகள் ஆவினில் இருந்தே வாங்கப்படுகிறது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக ஒரு கிலோ இனிப்பும், காரமும் வழங்கப்படுவது வழக்கம். இந்த இனிப்புகள் அரசு துறையான ஆவினில் இருந்து வாங்கி வழங்கப்படும் நிகழ்வே நடைபெற்று வருகிறது.  பொதுவாகவே அரசு துறைகளுக்கு தேவையான சுவிட்கள் ஆவினில் இருந்துதான் வாங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த முறை,  இனிப்புகளை வெளி நிறுவனத்திடம் இருந்த வாங்க டெண்டர் விடப்பட்டது. இதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் தலையீடு காரணமாக, சுவிட் வாங்கும்  டெண்டர் விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பை குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜகண்ணப்பனும், குறைந்த விலையில் தரமான இனிப்புகளை வழங்கும் நிறுவனத்திடமே ஆர்டர்களை கொடுப்போம் என விளக்கம் அளித்திருந்தார்.

அரசு நிறுவனத்தை விட்டுவிட்டு தனியார் நிறுவனத்திடம் இனிப்பு வாங்க முயற்சித்த நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. இந்த நிலையில்,  போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான தீபாவளி இனிப்புகள் ஆவின் நிறுவனத்திடமே ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை சார்பில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் அரை கிலோ இனிப்புகளுக்கு ஆவினில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அவை குறித்த நேரத்தில் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.