திருவாரூர்: திருவாரூரில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக, பிரபலமான தியாகராஜ சுவாமி கோயில் குளத்தின் சுவர் இடிந்து உள்வாங்கியது.இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குளத்தின் சுவர் உள்பகுதியில் விழுந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக, வெப்பச்சலன், காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதுபோல, திருவாரூர் மாவட்டத்தில்  நேற்று நள்ளிரவில் கனமழை பெய்தது.  சுமார் 52 புள்ளி 2 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இந்த கனமழை காரணமாக, பழமையான  தியாகராஜ சுவாமி கோயிலில் தீர்த்த குளமான, கமலாலயத்தீர்த்த குளத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.

இந்த குளம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், அப்போதே கோவில் குளத்தைச் சுற்றி  நான்கு கரையிலும், பூமிக்கடியில் இருந்து 25 அடி உயரத்துடன், பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த சுவர் செதமடைந்திருந்த நிலையில், நேற்று  நள்ளிரவில் பெய்த கனமழையில் பக்கவாட்டு சுவர் இடிந்து உள்வாங்கியது.

அத்துடன் சாலையின் நடுவில் விரிசல் விட்டுள்ளதால், எந்த நேரத்திலும், சாலை இரண்டாக பிளக்கும் அபாய நிலையில் உள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மழை தொடர்த்ல் மற்ற சுவர்களும் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளதாகவும், உடனே நகராட்சி நிர்வாகமும், ஆலய நிர்வாகமும் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.