சென்னை: அண்ணாமலை மீது கை வைப்பேன் என்று நான் சொல்லவில்லை, பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து அப்படி சொல்லியிருக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு மீது கடந்த சில நாட்களாக ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். மின்சார வாரியத்தில் ஊழல், போக்குவரத்து துறையில், இனிப்புகள் வாங்குவதில் அமைச்சர் மகன் தலையிட்டு, தனியாரிடம் வாங்க முயற்சி என பல்வேறு குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வருகிறார். அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின்துறை ஊழல் குறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்த நிலையில், போக்குவரத்து துறை ஊழல் குறித்து, அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை. அதே வேளையில், போக்குவரத்துத்துறைக்கு தேவையான இனிப்பு வகைகளை ஆவினில்தான் வாங்க வேண்டும், தனியாரிடம் வாங்கக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக கூறியிருப்தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த செய்தி சில ஊடங்களில் திரித்து வெளியிடப்பட்டது.
இதற்கு பதில் அளித்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கள் மேல் கை வைப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். வைத்துப்பார்த்தால் தானே பாஜக யாரென்று, தைரியமிருந்தால் கை வைத்துப் பார், தொட்டு பார்க்கட்டும், 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். மோடி டெல்லியில் உள்ளார். தொடுவார்கள் என காத்திருக்கிறோம், தொட்டு பார்க்கட்டும். ஒரு ஹார்பர் தொகுதியிலிருந்து சேகர் பாபு அரசியல் செயகிறார். பாஜக, 11 கோடி உறுப்பினர்கள் கொண்டது. பாஜக மீது திமுக கைவைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுக்கப்படும் என்று ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
மேலும், ஊழல் செய்தவர்கள் எங்கு இருந்தாலும் தூக்கி கொண்டு வருவோம் என பிரதமர் மோடி சொல்லியுள்ளார் . அது தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “கோயிலைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று அகற்றுவோம்.
பராமரிப்பில்லாத திருக்கோயில்களை கண்டறிந்து அவற்றை மேம்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது; சுற்றுலாத் துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “அண்ணாமலை மீது கை வைப்பேன் என்று நான் சொல்லவில்லை; பத்திரிகைகளில் வந்த செய்தியை வைத்து அப்படி சொல்லியிருக்கிறார், அன்பால் கூட ஒருவர் மீது கை வைக்கலாம், நிலைதடுமாறும் போது கை கொடுத்தும் காப்பாற்றலாம்” என்று விளக்கமளித்துள்ளார்.