சென்னை: நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் காலியாக இருந்த பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்கின்றனர். இந்த பதவி ஏற்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாத  9 மாவட்டங்கள், மற்றும் காலியாக இருந்த பதவிகளுக்கான தேர்தல்கள் கடந்த 6-ம் தேதி முதற்கட்டமாகவும் 9-ம் தேதி 2-ம் கட்டமாகவும்  நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12-ம் தேதி தொடங்கி, 13-ம் தேதி மாலை வரை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரம், மாவட்டம் வாரியாக தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த தேர்தலில் பெற்றவர்களுக்கு நாளை  பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆட்சியர் முன்னிலையில் பதவியேற்கின்றனர். மற்றவர்கள் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நாளை காலை பதவியேற்க உள்ளனர். அவர்களை தொடர்ந்து அந்தந்த ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்க உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 22-ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய குழுத்தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெறவுள்ளது.

வரும் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவிக்கும், ஒன்றிய குழுத் தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் காலையிலும், துணைத்தலைவர் பதவிக்கு மாலையிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படு வதால் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் போட்டியின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் பதவியேற்ற உறுப்பினர்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு அதன் மூலம் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள்.