ஏவுகனை நாயகன், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் 90வது பிறந்த நாள் இன்று. ‘கனவு காணுங்கள்’ என இந்திய இளைஞர்களை ஊக்குவித்த அப்துல்கலாம், இன்று நம்மிடம் இல்லாவிட்டாலும், அவரது கனவு நிறைவேறி வருகிறது.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டமான ராமேஸ்வரத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அவர்கள் கடின உழைப்பாலும், ஒருமுக சிந்தனையாலும், விடா முயற்சியாலும் சிறந்த விஞ்ஞானியாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும் குடியரசுத் தலைவராகவும் விளங்கினார்.
குடியரசுத் தலைவராக இருந்த போதும் சரி, அதன் பின்னரும் சரி, அவரது சிந்தனை எப்பொழுதும் மாணாக்கர்கள், இளைஞர்கள் ஆகியோரைப் பற்றியே இருந்தது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு கண்ட கலாம், மாணாக்கர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்தார்.
இந்தியா வல்லரசாக உருவெடுக்க, மாணாக்கர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என்பதால் தான் மாணாக்கர்களை, ‘கனவு காணுங்கள், அந்தக் கனவு உறக்கத்தில் வரும் கனவாக இருக்கக் கூடாது. உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்’ என தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக எடுத்துக் கூறினார்.
‘வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டமில்லாமல் இருப்பது தான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி’ என வெற்றியின் ரகசியத்தை மாணாக்கர்களுக்கு போதித்தார்.
மறைந்த அப்துல் கலாம் பெரும்பாலான சமயங்களில் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார். இளைய தலைமுறையினரையும், மாணாக்கர்களையும் தனது பேச்சினாலும், கருத்துகளாலும் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்வில் உன்னத நிலையை அடைவதற்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறந்த பங்காற்றிடவும் உந்துசக்தியாக விளங்கினார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15-ம் நாள் ‘இளைஞர் எழுச்சி நாள்’ என தமிழக அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல, என்று மகாராஷ்டிரா மாநில அரசுவாசிப்பு நாளாக கொண்டாடப்படும் அறிவித்துள்ளது.