சென்னை: 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து, நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்க வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று கூறியதுடன், தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்களும், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களுடன் வகுப்பறையில் அமரலாம் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும், குழந்தைகளால் நீண்ட நேரம் மாஸ்க் அணிய முடியவில்லை என்றால், பெற்றோர்களே அவர்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாம். மாணாக்கர்கள் நேரடி வகுப்புகளுக்கு வருவது கட்டாயம் அல்ல என்று கூறியவர், மாணவர்களின் நலனுக்காகவே பள்ளிகள் திறக்கப் படுகின்றன என்றார்.
மேலும், தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும், 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது என்று கூறியவர், அவர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத்தேர்வுகளை எழுத வேண்டியது இருக்கும் என்றும், பொதுத்தேர்வுக்கு முன் மாணவர்கள் பயிற்சி பெரும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டப்படி நவம்பர் 1ம் தேதி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பெற்றோர் பள்ளிக்கு வெளியே காத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.