சென்னை: தமிழ்நாடு காவல்துறையிலன்கீழ் செயல்பட்டு வரும் உளவுத்துறைக்கு ஏற்கனவே ஒரு எஸ்.பி. உள்ள நிலையில், தற்போது மேலும் எஸ்.பி.யாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே பதவியில் 2 பேர் நியமிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை வரலாற்றில் இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றது முதல், மாநிலம் முழுவதும் காவல்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர். தொடர்ந்து மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது உளவுத்துறைக்கு கூடுதலாக ஒரு எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் , டிஐஜி ஆக ஆசியம்மாள் எஸ்எஸ்பி-யாக அரவிந்தன் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். ஏற்கனவே அரவிந்தன் பொறுப்பு வகித்து வரும் நிலையில் கூடுதலாக ஒரு எஸ்.பி.யை தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி இந்த பணியில் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். சரவணன் ஏற்கனவே ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவில் எஸ்பி ஆக இருந்தவர். இதன்மூலம் தமிழக காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக உளவுத்துறைக்கு மேலும் ஒரு எஸ்பி பணியிடத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது .