மதுரை:  அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா தொடங்கி உள்ளது. இதையொட்டி முதல்நாளான நேற்று (7ந்தேதி) அன்னை மீனாட்சி  இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக, ஆலயங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த திமுக அரசு தடை விதித்துள்ளது. இதனால், கோவில்களில் திருவிழாக்கள் பக்தர்களின்றி எளிமையாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் தொன்மையான கோவில்களில் ஒன்றான அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும்  10 நாட்கள் நடைட்கள் விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில் அம்பாள் தினமும் ஒவ்வொரு வேடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக  கடந்த 2 ஆண்டுகளாக  நவராத்திரி விழா கட்டுப்பாட்டுகளுடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 7ந்தேதி தொடங்கியது. இதையொட்டி கோவிலில் கொலுவும் வைக்கப்பட்டு உள்ளது.  இந்த விழா  15-ந்தேதிவரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி 10 நாட்களிலும் நவராத்திரி உற்சவம் நடக்கிறது. நவராத்திரி நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தான சன்னதியில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.  10 நாட்களும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலிக்கிறார்.

முதல் நாளான 7-ந்தேதி, மீனாட்சி அம்பாள்  ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வு ஆன்லைனில் ஒளிபரப்பானது.

இன்று (8ந்தேதி) ஊஞ்சல் வைபவமும், நாளை 9-ந்தேதி கோலாட்டம், 10-ந்தேதி திருநீல கண்டயாழப்பாணருக்கு தங்கபலகை கொடுத்தல் நிகழ்வு நடைபெற உள்ளது.

வரும், 11-ந்தேதி சங்கீத சீயாமளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி பாண பத்திரருக்கு திருமுகம் கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி அம்மன் மகிஷாசுரமர்தினி வேடத்திலு அருள் பாலிப்பார்.

14-ந்தேதி சிவபூஜை நடக்கிறது. தொடர்ந்து கல்பபூஜை, சகஸ்ரநாம பூஜை இரவு 8.30 மணி வரை நடக்கும்.

தொடர்ந்து, வருகிற 20-ந்தேதி (புதன் கிழமை), சாந்தாபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடக்கிறது.

கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அம்மனுக்கும் தினசரி அர்ச்சனைகள் செய்யப்படும்.

நவராத்திரி நாட்களில் அரசு விதிமுறைப்படி 8-ந்தேதி, 9-ந்தேதி, 10ந்தேதி  பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் பட மாட்டார்கள். மற்ற நாட்களில் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்யலாம் என்று அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.