சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் ந்தேதிமுதல் 1வகுப்புமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வரும் 12ந்தேதி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்யைக தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர், மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் மூலம் பாடம் கற்று வருவதால், மாணவர்கள் பல்வேறு வகையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கல்வியாளர்கள் கூறி வந்தனர். பள்ளிகளை திறந்த நேரடி வகுப்புகளை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
அதையடுத்து, கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து நவம்பர் 1ந்தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டதும், ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி, முகக்கவசம் கட்டாயம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரும் 12-ஆம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அப்போது, வகுப்பறைகளை சுத்தம் செய்வது , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.