சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருகிறது.  தமிழ்நாட்டில் மழைக்காலமான வடகிழக்கு பருவமழை  இன்னும் தொடங்கப்படாத நிலையில், ஏரியில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால்,  பொதுப்பணித்துறை அதிகாரிகள் உஷார் நிலையில் ஏரியை கண்காணித்து வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு அவ்வப்போது  ஆங்காங்கே பெய்துவரும் கனமழை காரணமாக, பல்வேறு நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதுபோல சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கும் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் குடிநீருக்கு தட்டுபாடு இல்லாமல் இருந்து வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் முதன்மையானது  செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 6,303 ஏக்கர். மொத்த நீர் மட்ட உயரம் 24 அடி. இந்த ஏரியில்  3.6 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.  ஆனால், நீர் மட்டம் 21 அடி வந்ததும்,, உபரி நீர் திறந்து விடுவது வழக்கம்.

இந்த நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடிக்கடை மழை பெய்து வருவதால் ஏரிக்கு தண்ணீர் வருவது அதிகரித்து வருகிறது. நேற்று காலை முதல் அடைமழை பெய்து வருவதால் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிக்கு வினாடிக்கு 715 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது இதனால் ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று  ஒரே நாளில் 50 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஏரியை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி இந்த ஆண்டு ஜனவரியில் முழுமையான கொள்ளவை எட்டியதால், ஜனவரி 5ஆம் தேதி உபரி நீர் திறக்கப்பட்டது.  பின்னர் கிருஷ்ணா நதி நீரால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்ததுடன்  மீண்டும் பெய்த மழையால் இரண்டாவது முறையாக உபரி நீர் திறக்கப் பட்டது. தற்போது மீண்டும் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் 3வது முறையாக திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.