சென்னை: தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழகம் என உலகளாவிய PIWOT தொழில்நுட்ப மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
உலகளாவிய இரண்டு நாள் தொழில்நுட்ப மாநாடான ‘PIWOT’ இன்று தொடங்கிறது. முதல்நாள் நிகழ்ச்சியான இன்று மாநாட்டை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
ஐ.ஐ.டி.க்கள் நமது வளர்ச்சியில் பெருமைப்படத்தக்க வகையில் பங்காற்றியுள்ளன. அதிலும் சென்னை ஐ.ஐ.டி, தமிழ்நாடு அரசு பல்வேறு முனைகளில் இருந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் அரசுக்கு உறுதுணையாய் இருந்துள்ளது. அந்த வகையில் பெருமை வாய்ந்த ஐ.ஐ.டி.யின் இத்தகைய தொழில்நுட்ப நிகழ்வில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் மையமாக, தமிழ்நாடு உருவாவதற்கான பயணம் தொடங்கும் இவ்வேளையில், உங்களிடையே உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைவதோடு, நமது பயணத்தின் இலக்கை அடைய உதவுவதில் PAN IIT network முக்கியப் பங்காற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் பிரிவுகளில் கவனம் செலுத்தி, அதன்மூலம் ஒரு ட்ரிலியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் எனறு நாம் விரும்புகிறோம்.
உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் தமிழகம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டிலேயே இரண்டாவது இடம் வகிப்பதுடன், தொழில் வளர்ச்சி மிக்க மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ்நாடு உள்ளது. ஐ.டி. துறையைப் பொறுத்தவரையில், இந்தியாவில் இருந்து அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களுள் ஒன்றாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
அதாவது, நாட்டின் மொத்த ஐ.டி.துறை சார்ந்த ஏற்றுமதிகளில் 10 விழுக்காடு தமிழ்நாட்டினுடையதாகும். கடலடி கேபிள்கள் தமிழ்நாட்டில் வரப்போவதால் தகவல் தரவு மையங்களும்; காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தியில் இருந்து பெறப்படும் பசுமை மின் திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக மின்மிகை மாநிலமாகத் தமிழ்நாடு மாற உள்ளதாலும்; பல்வேறு நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு ஏற்ற இடமாக இருக்கும். தொழில்நுட்பக் கல்வி முடித்த பட்டதாரிகளும் ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதால் இந்நிறுவனங்களுக்குத் தேவையான திறன்மிகு பணியாளர்களும் எளிதில் கிடைப்பார்கள். இத்தகைய வளமும் வாய்ப்பும், முதலீட்டாளர்களுக்கான சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டைத் தகுதிப்படுத்தியுள்ளது.
தொழில் முனைவோருக்கு சிறந்த மாநிலம்
ஆட்டோமொபைல், மருந்துப்பொருட்கள், மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள், காற்றாலைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட உற்பத்திப் பிரிவுகளைத் தமிழ்நாடு கொண்டுள்ளது. மின்னணுப் பொருட்களைத் தயாரிப்பதில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இத்தகைய சூழலால் புதுமையான சிந்தனையுடன் களமிறங்கும் தொழில்முனைவோர்களுக்கு ஏற்ற சிறந்த களமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்குவதில் எப்போதுமே தமிழ்நாடு அரசு முன்னோடியாக இருந்து வருகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் 1997-ம் ஆண்டே தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார்.
1999-–2000-ஆம் ஆண்டே, பள்ளிப் பாடத்திட்டத்தில் மட்டுமின்றி – கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்வி பாடத்திட்டங்களிலும் கணினிப் பாடத்தைக் கொண்டு வந்தார்.
1996–-2001 ஆட்சிக் காலத்திலேயே ‘Empower IT’ என்ற நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி, தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை பட்டிதொட்டிகள் எல்லாம் கொண்டு சென்றார்.
அப்போதே Mobile Governance, E-–Governance போன்றவை அரசு அலுவலகங்களில் – அரசு சேவைகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சாதனைகளுக்கு கருணாநிதி காரணம்
தகவல் தொழில்நுட்பத்தில் இன்றைய சாதனை, முத்தமிழறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
ஐ.டி. துறையினர் திறமையானவர்களைக் கண்டறிவதற்கு ஏதுவாக, தமிழ்நாட்டில் ஏராளமான அறிவியல் – தொழில்நுட்ப – பொறியியல் கல்லூரிகள் உள்ளன. சென்னை ஐ.ஐ.டி, திருச்சி என்.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலக அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக உள்ளன.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அதேபோல், நாட்டிலேயே அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஓசூரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எல்காட் நிறுவியுள்ளது. உலகத் தரத்திலான பொருட்களையும் சேவைகளையும் வழங்குவதற்கான வாய்ப்பை இது அங்குப் பணிபுரிவோர்க்கு ஏற்படுத்தித் தருகிறது.
முதலீட்டாளர்களுக்கு அழைப்பு
தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையம் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 35 நிறுவனங்களுடன் 17,141 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. இதனால் 55,000 புதிய வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டில் உருவாகும். தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக புதிய கொள்கைகளை வகுத்து வருவதோடு, ஒற்றைச் சாளர முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது.
புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும் ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாகவும் வளர்ச்சியைத் தரும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருக்கும் என்பதை முதலீட்டாளர்களுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் தொழில் நிறுவனத்தினர்க்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரையும் தமிழ்நாடு வருக வருக என வரவேற்கிறது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.