சென்னை: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஜனவரி2022ல் இருந்து வழங்கப்படும் என்றும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்படுவதாகவும், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்டு 13ந்தேதி அரசின் பட்ஜெட் தாக்கலின்போது, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தப் படும் என கூறப்பட்டது. இது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சில இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டமும் நடத்தினர். இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை ஜனவரி முதல் வழங்குவதாக முதல்வர் அறிவித்து உள்ளார். மத்தியஅரசு ஏற்கனவே வழங்கி வருகிறது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில், ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன வரும் 13-ம் தேதியுடன் சட்டப்பேரவை நிறைவடைய உள்ளது.
இன்றைய கூட்டம் தொடங்கியதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும். அகவிலைப்படி அமல்படுத்தப்படுவதால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
அரசுப்பள்ளியில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதால், மாணவர் – ஆசிரியர்கள் விகிதாச்சாரம் இணையாக இருப்பதற்காக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத் தொகை விரைவில் அறிவிக்கப்படும்.
ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணியமர்த்தப்படும் முறை ஒழிக்கப்படும்.
சத்துணவு சமையல் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படுகிறது.
ஸ்டிரைக்கில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலைநிறுத்த காலம், பணிநீக்க காலம் வேலைநாட்களாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.