70-தை தொடுகிறார், ‘எவர்கிரீன் தேவா’ ..
நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
ஜினி பவர்ஃபுல்லாக நடிப்பை வெளிப்படுத்திய முக்கிய படங்களில் ஒன்று, தளபதி. இந்த படத்தில் ரஜினிக்கு வினோதமான சிக்கல் நண்பனாக வரும் தேவா பாத்திரம்.
கொஞ்சம் அசந்தாலும் தேவாவாக வரும் மம்முட்டி அசால்டாக படத்தை தன் படமாக தட்டிக் கொண்டு போய் விடுவார்.
படத்தில் சூர்யாவுக்கும் தேவாவுக்கும் நடிப்பில் உண்மையிலேயே வின்-வின் சிச்சுவேஷன்தான்..
எதற்காக இதைச் சொல்கிறோம் என்றால், ஒரு அந்நிய மொழி படம் என்றாலும் நடிப்பு என்று வந்துவிட்டால் மம்முட்டியின் அதகளம் தவறவே தவறாது..
பாலச்சந்தரின் அழகன் படத்தில் நட்சத்திர ஓட்டல் முதலாளியாக வரும் அழகப்பன் பாத்திரம்.. ஒரு நிகழ்ச்சிக்கு திடீர் விருந்தாளியாக அழைக்கப்பட்டு உப்புமா பற்றி அவ்வளவு சுவாரஸ்யமாக பேசும்போது கீதா பானுப்பிரியா மதுபாலா ஆகியோர் மட்டுமா விழுந்தார்கள்?
தியேட்டரில் இருந்த ரசிகர்களும் தானே மம்முட்டி நடிப்பில் சொக்கிப் போனார்கள்.
இதேபோல மறுமலர்ச்சி படம் தமிழ் நடிகர்கள் யாரும் ராசு படையாட்சி கேரக்டரில் நடிக்க முன்வராத போது தைரியமாக வந்து அந்த பாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார் மம்மூட்டி.
ஆனந்தம் படத்தில் அசல் மளிகைக்கடை வியாபாரி போலவே வந்து போன விதம் இன்னமும் நெஞ்சை விட்டு அகலவில்லை.. கண்டுகொண்டேன் போல இன்னும் சில தமிழ் படங்கள்..
உண்மையைச் சொல்லப் போனால் நாற்பதாண்டுகளுக்கு முன்பு மம்முட்டி யார் என்று தெரியாமல் அவருடைய பல படங்களை பார்த்து இருக்கிறோம் மம்முட்டிக்காக அல்ல. மலையாள படம் என்றாலே மேட்டர் படம் என்று நினைத்திருந்த காலம் அது. எங்கள் ஊரான காஞ்சிபுரத்தில் டப்பிங் செய்து போடுகிறார்களோ அல்லது நேரடியாக போடுகிறார்களோ, இடையில் ஓரிரு இடங்களில் பிட்டை சொருகி விடுவார்கள். மம்முட்டி மட்டுமல்ல பாலன் கே நாயர் மோகன்லால் போன்றோரின் அருமையான படங்களும் இப்படித்தான் தமிழகத்தின் பல ஊர்களில் கடந்திருக்கும் என்று நினைக்கிறோம்.
பின்னாளில் மம்முட்டி என்பவர் அற்புதமான நடிகர் என்பது புரிய வந்த பிறகே அவர் மீதான ஆர்வம் அதிகரித்தது.. தேடலும் தொடர்ந்தது ..
1970-ஆம் ஆண்டு மாணவன் படத்தில் இளைஞனாக முதன்முறையாக கமலஹாசன் திரையில் தோன்றி விசிலடிச்சான் குஞ்சுகளா என்று பாடிக் கொண்டிருந்தபோது படவாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார் இன்றைய மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி..
கமலை சிறுவனாக 1962-ல்மலையாளத் திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் கேஎஸ் சேதுமாதவன்தான் மம்முட்டியையும் அறிமுகப்படுத்தினார் ஆனால் சிறிய வேடத்தில்.. அதே கமலஹாசன் ஏராளமான படங்களில் நடித்து வசூல் மன்னனாக உயர்ந்து 1987ல் நாயகன் என்ற பிரம்மாண்டமான படத்தின் மூலம் நடிப்பில் வேறு ஒரு தளத்திற்கு தாவிய போதுதான் நியூடெல்லி என்ற மலையாள படம் மூலம் மம்முட்டிக்கு மிகப் பெரிய பிரேக்கையே தந்தது.. இதற்கு முன்னரும் மம்முட்டி கதாநாயகனாக ஏராளமான படங்களில் நடித்திருந்தார்.. லோ பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் மலையாளத் திரைப்பட உலகில் வருடத்திற்கு 20 படங்கள் கூட மம்முட்டி நடித்து தள்ளினார்.
1971ல் திரையில் அறிமுகமான படத்தில் ஒரெயொரு சீன்.. அதன்பின் அவ்வளவு போராட்டம். ஏராளமான படங்களில் நடித்தாலும் பெரிய வளர்ச்சியில்லை..
1987..ஆக்சன் திரில்லரான நியூ டெல்லி படம் மம்முட்டிக்கு ஏற்படுத்தி தந்த திருப்பம் கொஞ்சநஞ்சமல்ல..
பிரபலங்கள் கொல்லப்பட்டதாக முன்கூட்டியே பத்திரிகை தலைப்புச் செய்தியாக அச்சடித்து விட்டு அதன் பிறகு காலையில் பத்திரிகை வெளியாகும் முன்பே திட்டமிட்டு கொலை செய்யும் செம த்ரில்லிங்கான பாத்திரம் மம்முட்டிக்கு..
நியூடெல்லி படம் ஓடிய ஓட்டம், சிபிஐ டைரிகுறிப்பு, ஐயர் தி கிரேட், ஒரு வடக்கத்தன் வீரகதா, 1921 என மம்முட்டியின் திரைப் பயணத்தை ஜெட் வேகத்தில் ஏற்றிவிட்டது.
அதையெல்லாம் விவரிக்கப் போனால் அது எங்கேயோ போய்க் கொண்டிருக்கும்
மூன்று முறை தேசிய விருதுபெற்றவர்.. முன்னணி இளம் கதாநாயகனுக்கு தந்தை.. இன்றைக்கும் மலையாள உலகின் உலகின் சூப்பர் ஸ்டார்.. பல சிறப்பம்சங்கள்.
நம்ப முடியாத அதிசயமாக இருக்கிறார் இன்று பிறந்தநாள் காணும் 70 வயது மம்முட்டி..