சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ந்தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. திமுக அரசும், ஆளுநர் உரையில் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தது. இதையடுத்து, தேர்தலுக்கான பணிகளை நடைபெற்று வரும் வகையில் அறிவிப்புகளும் வெளியானது.
ஆனால், தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மீதமுள்ள 9மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்ற கதவை மீண்டும் தட்டியுள்ளது. ஆனால், தமிழக அமைச்சர்களோ, உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கூறி வருகின்றனர். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேருவும், அரசாங்கத்தை பொறுத்தளவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளதாகவும், டிசம்பருக்குள் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
ஒருபுறம் உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டுக்கொண்டே மறுபுறம் தேர்தல் டவிரைவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் தமிழகஅரசு வெளியிட்டு மக்களை குழப்பி வருகிறது.
ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடியிருந்தது. ஜூன் 21ந்தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளி யிட்ட தீர்ப்பில், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி உத்தரவிட்டிருந்த நிலையில், 18 மாதங்கள் ஆகியும் தேர்தலை நடத்தாதது ஏன் என கடுமையாக சாடியதுடன், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று செயல்படுத்தவில்லை எனில் தமிழக தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர். தொடர்ந்து, 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15-க்குள் நடத்தி முடிக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். அப்போது, தமிழகஅரசு சார்பில் கோரப்பட்ட கால அவகாசத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துமாறு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரம் காட்டப்பட்டன. சமீபத்தில் 9 மாவட்டங்களுக்கு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு நேரம் குறித்த அறிவிப்பையும் மாநில தேர்தல் ஆணையர் சுந்தரவல்லி வெளியிட்டார். இதனால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், அறிவிப்புக்கு மாறாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில், மேலும் 6 மாதம் கால அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கியதுடன், இனிமேல் அவகாசம் கிடையாது என்று எச்சரித்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பில், தற்போது 3-வது முறையாக அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் திமுக அரசு மக்களை குழப்பி வருவது இதன்மூலம் தெரிய வருகிறது.
இதற்கிடையில் இன்று செய்தியளார்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகவும், நீதிமன்ற உத்தரவை பொறுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று கூறியதுடன், தேர்தலை நடத்த மேலும் சில மாதங்கள் கூடலாம் என்றும் அல்லது குறையலாம் அல்லது அதே நேரத்தில் நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார். உறுதியான அறிவிப்பை வெளியிடாமல் அவரும் மக்களை குழப்பியுள்ளார்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட புதிதாக 6 மாநகராட்சிகள், 30க்கும் மேற்பட்ட நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாலும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. தேர்தலுக்கான வார்டுகள் மறுவரையரை செய்ய வேண்டியுள்ளது. வார்டு மறு வரையறை பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது. மறுவரையறைக்காக 100 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டியுள்ளது என்று கூறியிருப்பதுடன், அரசாங்கத்தை பொறுத்தளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
9மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல்!