சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு ஏற்பட்டுஉள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் இறுதியில் நடைபெற்று முடிந்த நிலையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அதன்படி,  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ,கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செம்படம்பர் 15ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, 9 மாவட்டங்களில்  ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது.  சமீபத்தில் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தேர்தலை  6 மாதங்கள் தள்ளி வைக்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. 9 புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. ஏற்கனவே இரு முறை அவகாசம் கோரியிருந்த நிலையில் தற்போது 3வது முறையாக கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளது.

ஒருபக்கம்,  மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவல்லி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்குப்பதிவின் போது மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம் என கூறிக்கொண்டே, மற்றொரு புறம் தேர்தல் நடத்த அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளார்.