சென்னை: தமிழ்நாட்டில் வழிபாட்டுத்தலங்களுக்கு, வெள்ளி, சனி, ஞாயிறு தடை தொடரும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தில் இருந்து 90 சதவிகிதம் அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில், கடற்கரைகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், மால்கள், தனியார் விடுதி பார்கள் உள்பட பொழுதுபோக்கு இடங்களும் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டு உள்ளன. மேலும், தியேட்டர்கள் திறப்பு உள்பட வெளிமாநில பேருந்து இயக்கம் என ஏராளமான தளர்வுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதனால் பல மாதங்களாக வீடுகளிலேயே முடங்கிக்கிடந்த பொதுமக்கள், வீட்டை விட்ட வெளியேறி சுதந்திரக்காற்றை சுவாசித்து வருகின்றனர். இந்த நிலையில், வழிபாட்டுத்தலங்களுக்குவிதிக்கப்பட்டுள்ள வார இறுதி தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.
இதுதொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெள்ளி சனி ஞாயிறுகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறந்து ஒரு வாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டு தலம் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என்று கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறப்பு குறித்து மருத்துவத்துறை, வருவாய், பேரிடர் நிர்வாக துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடற்கரை , தியேட்டர் திறப்பால் கொரோனா தொற்று எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களுக்காக காத்திருப்பதாகவும், கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்தால் கூடுதல் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது.
பெரும்பாலான தடைகள் விலக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது மனக்குறைகளை மனம்விட்டு பேசும் ஆலயங்களுக்கு செல்ல தமிழகஅரசு தடை விதித்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.