சென்னை: நடப்பாண்டு தமிழ்கத்தில் பொறியியல் படிப்புக்கு 1,74,171 பேர் விண்ணப்பம்  செய்துள்ளனர். அவர்களின் பணம் கட்டியவர்களுக்கு இன்று மாலை ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது.

பொறியியல் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி தொடங்கி நேற்றுடன் (ஆகஸ்டு 24ந்தி). முடிவடைந்தது. நேற்று மாலை நேர தகவல்படி, நடப்பாண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 171 பேர் விண்ணப்ப பதிவு செய்திருக்கின்றனர். கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த ஆண்டைவிட  இந்த ஆண்டு 13 ஆயிரம் பேர் அதிகமாக விண்ணப்பித்து உள்ளனர்.

விண்ணப்பித்துள்ள 1,74,171 பேரில், 1,43,774 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். அவர்களில், 1லட்சத்து 38 ஆயிரத்து 533 மாணவ-மாணவிகள் மட்டுமே முழுமையான  சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்ப பதிவை பூர்த்தி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் போன்ற விண்ணப்ப பதிவு பணிகளை முழுமையாக பூர்த்தி செய்தால்தான் சம்பந்தப்பட்டவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் இன்று மாலை (புதன்கிழமை) வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ரேண்டம் எண்களை மாணவர்களின் செல்போன் எண்ணுக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்க உள்ளது.

கலந்தாய்வின் போது ஒரே கட் – ஆப் பெற்ற மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை வழங்குவது என்பதில் சிக்கல் ஏற்படும் போது, அதை எளிதாக்க ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் பயனுள்ளதாக உள்ளது. 10 எண்கள் கொண்ட ரேண்டம் எண்களில், யாருக்கு பெரிய எண் வருகிறதோ அவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்.

கலந்தாய்வை நடத்தும் போது ஒரே மாதிரியான கட் – ஆப் பலருக்கும் வர வாய்ப்பு உள்ளதால், கணிதம், இயற்பியல், விருப்பப் பாட மதிப்பெண்கள், 12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் இவற்றுடன் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.