சென்னை: மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு மற்றும் ஆவணங்களை 6மாதத்திற்குள் சென்னைக்கு இடம் மாற்ற வேண்டும் என்று மத்தியஅரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கீழடி, கொந்தகை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்களில் அகழாய்வு நடத்தக்கோரி எழுத்தாளர் எஸ்.காமராஜ், மதுரை சமணர் படுகை உள்ளிட்ட பழங்கால அடையாளங்களைப் பாதுகாக்கக் கோரி நாகமலை புதுக்கோட்டை ஆனந்தராஜ், தமிழகத்தோடு தொடர்புடைய ஆவணங்கள் மைசூருக்கு எடுத்துச்செல்வதை தடுக்க வேண்டும் என்பது குறித்து மதுரையை சேர்ந்த மணிமாறன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், மைசூரிலுள்ள கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ்மொழி தொடர்பான கல்வெட்டுக்களை தமிழக தொல்லியல் துறையின் கீழ் இயங்கும், கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை அரசியலமைப்பு சட்டப்படி நவீன முறையில் பாதுகாக்கப்பட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் கடந்த விசாரணையின்போது, இந்தியாவில் கண்டறியப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறிருக்கையில், தமிழுக்கான கல்வெட்டுக்களை திராவிட மொழி கல்வெட்டுக்கள் என அடையாளப்படுத்துவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், சுமார் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியைச் சார்ந்தவை எனும்போது, அதை ஏன் மைசூர் கொண்டு சென்று வைக்க வேண்டும்? கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் காவிரி பிரச்சனை இருக்கும் நிலையில் தமிழகத்திலேயே கல்வெட்டுகளை பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கலாமே? என கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விவாதங்களை தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி பால் கிருபாகரன், சென்னையில் உள்ள தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை தமிழ் கல்வெட்டியல் துறை என பெயர்மாற்றம் செய்யவும், 6 மாதத்திற்குள் சென்னையிலுள்ள தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு, மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும், சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து தர வேண்டும் என்றும் உதவிட்டுள்ளனர்.