டெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 13ந்தேதி நடைபெறும் என அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து, அதிமுக ராஜ்யசபா எம்.பி.க்களான கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், தங்களது ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், அதிமுகவைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான முகமது ஜான் காலமானார். இதனால் அந்த 3 இடங்களில் காலியாக உள்ளது. அதிமுகவுக்கு ராஜ்யசபாவில் 8 எம்.பி.க்கள் இருந்த நிலையில் தற்போது 5 எம்.பி.க்களே உள்ளனர். காலியாக உள்ள ந்த 3 இடங்களுக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலினை செப்டம்பர் 1ம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் செப்டம்பர் 3ம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேவை. தற்போது தமிழகத்தில் அதிமுகவுக்கு 66 இடங்கள் மட்டுமே உள்ளது.கூட்டணி கட்சியான பாமகவுக்கு 5 இடங்களும், பாஜகவுக்கு 4 இடங்களும் கிடைத்துள்ளன. இதனால் மொத்தம் 75 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால், அதிமுகவுக்கு 2 ராஜ்யசபா எம்.பி.க்கள் பதவி கிடைப்பது உறுதியாகி உள்ளது. ஒரு எம்.பி. பதவி திமுகவுக்கு செல்கிறது.