கார் விபத்துக்குப் பிறகு முதன் முறையாக தனது உடல்நிலை குறித்த அப்டேட்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
கடந்த வாரம் சூளேரிக்காடு அருகே அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது. இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் யாஷிகா மீது அதிவேகமாக காரை ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தியது என்று மூன்று பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த யாஷிகா, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ”இடுப்பு எலும்பில் பல எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காலில் எலும்பு முறிவு. சர்ஜரிக்குப் பிறகு ஓய்வெடுத்து வருகிறேன். என்னால் அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது. அதனால் இயற்கை உபாதைகள் உட்பட எல்லாமே படுக்கையில் தான். இடம், வலம் கூட திரும்ப முடியாது. எனது முதுகு பலத்த காயமடைந்துள்ளது. ஆனால் நல்லவேளை முகத்திற்கு எதுவும் ஆகவில்லை. நிச்சயமாக இது எனது மறுபிறப்பு தான். கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால் நான் இழந்ததை ஒப்பிடுகையில், இது ஒன்றுமே இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
https://www.instagram.com/p/CSGozXUFPft/
மேலும் தோழியின் மரணம் குறித்து உருக்கமான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார் யாஷிகா.
“நான் இப்போது என்ன நிலையில் இருக்கிறேன் என்பதை விவரிக்க முடியவில்லை. நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருப்பேன். இப்படி ஒரு மிகப் பெரிய விபத்திலிருந்து காப்பாற்றியதற்காக, கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை நொந்துக் கொள்வதா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் நான் பவானியை மிஸ் செய்வேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய் என தெரியும். என்னை மன்னித்துவிடு. உன்னுடைய குடும்பத்தை இப்படி ஒரு நிலைக்கு ஆளாகி விட்டேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.