சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் உறுதி அளித்தார். அதுபோல, பாஜக சார்பிலும், சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு கோரினால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறப்பட்டது.
தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று‘ 2வது நாளாக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.
இன்றைய விவாதத்தின்போது நீட் தேர்வு விலக்கு குறித்து விவாதம் எழுந்தது. அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு குறித்து மத்தியஅரசை வலியுறுத்தி வருவதாகவும், நான்கு ஐந்து முறை வலியுறுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா நடக்காதா என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். மாணவர்கள் தற்போது குழப்பமான மன நிலையில் இருப்பதால் நீட் தேர்வு நடக்குமா? இல்லையா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தினார்
அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரகப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தவறாக தகவலை கூறியதாக குறி்ப்பிட்டார்.
இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்விற்கு விலக்கு பெறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும். விலக்கு பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார். போராடுவோம்..வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் சூளுரைத்தார். கடந்த ஆண்டு இதே கேள்வியை திமுக எழுப்பியதாக சுட்டிக்காட்டியதோடு, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பதிலுக்கு, தமிழக அரசுக்கு கண்டிப்பாக அதிமுக துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் “சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு கோரினால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம்” என கூறியுள்ளார்.