தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஜூன் 28ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து இ-பதிவு முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இறப்பு, திருமணம், முதியோர் பராமரிப்பு, மருத்துவ காரணங்களுக்காக இ-பதிவு பெற்று பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் திருமண பிரிவில் அதிகமானோர் இ-பதிவு பெற்று வந்ததால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், திருமண நிகழ்ச்சிக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ,கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி ,திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே இ-பதிவு பெற்று பயணம் செய்யலாம் மற்றும் திருமணம் நடைபெறவுள்ள மாவட்டத்தின் ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இ-பதிவு முறையில் தவறான தகவல்கள் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். 27 மாவட்டங்களிலும் திருமணத்திற்கு வரும் அத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு இ-பதிவு மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.