கோவை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கோவையில் வசிக்கும்த உறவினரிடம் இருந்து ரூ.1லட்சம் பண மோசடி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் எஸ். வைத்தியநாதன். இவரது அத்தையின் குடும்பத்தினர் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று, நீதிபதியின் அத்தையிடம் (வயது 76) மர்ம நபர் ஒருவர் போன் மூலம் தொடர்பு கொண்டு, தான் ஆர்.எஸ்.புரம் வங்கியின் மேலாளர் என்றும், நமது வங்கியின் கிளை, பொதுத்துறை வங்கியுடன் இணைக்கப்பட உள்ளது. தற்போது பொதுமுடக்கம் காலம் என்பதால், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று ஏமாற்றி, அவரிடன் வங்கிக்கணக்குகள், ஆதார் விவரங்களை கேட்டுள்ளார்.
இதை உண்மை என நம்பிய முதிய பெண்மணி, அவர் கேட்டபடி தனது நான்கு வங்கிக் கணக்குகளின் விவரங்களையும், அவரது ஆதார் எண்ணையும், வாட்ஸ்அப் வழியாக குற்றவாளிக்கு அனுப்பி உள்ளார். சில மணி நேரத்தற்கு பிறகு, அவர், தனது கணக்கு ஒன்றிலிருந்து, 99,997 பணம் எடுக்கப்பட்டுள்ளதை, வங்கியில் இருந்து வரும் குறுந்தகல்வக்ள் மூலம் தெரிந்துகொண்டார். உடனே வங்கிக்கு போன் செய்து, விசாரித்தபோது, தன்னைத் தொடர்பு கொண்ட நபர் வங்கியின் பிரதிநிதி அல்ல என்று அவளுக்குக் கூறப்பட்டது.
இதுகுறித்து நீதிபதியின் உறவினரான அந்த முதிய பெண்மணி காவல்துறையின் சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார். வழக்கு தொடர்பாக நகர காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு வெள்ளிக்கிழமை விசாரணையைத் தொடங்கி உள்ளது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கோவை துணை போலீஸ் கமிஷனர் (குற்றம்) உமா தெரிவித்து உள்ளார்.