சென்னை:
கொரோனா நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்‘ மருந்து மருத்துவமனைகள் மூலமாகவே நேரடியாக வழங்கும் புதிய வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டு, உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளை தனியார் மருத்துவர்கள் பரிந்துரைந்து வந்தனர். இதனால் இந்த மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் இந்த மருந்தை கள்ளச்சந்தையில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கும் சட்டவிரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன.
இந்தநிலையில் ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ‘ரெம்டெசிவிர்’ மருந்து சிறிது பலன் தரும் என்றும், மற்ற நோயாளிகளுக்கு இதனால் பெரியளவில் பலன் கிடையாது என்றும் உலக சுகாதார நிறுவனமும், மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலமாக போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, தற்போது தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும், சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாகவும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
நமது நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே இவ்வாறு நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினரிடம் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் இடங்களில், அதிக கூட்டம் கூடுவதால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதால், அதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது. இங்கு மருந்துகளைப் பெறுவோர் சிலர், அவற்றைத் தவறான முறையில் அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது குறித்த புகார்களும் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.