காதல் மனைவி சிந்துஜாவை பறிகொடுத்த இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கொரோனா வைரஸ் பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். பின்னர் 2017ஆம் ஆண்டு ‘மரகத நாணயம்’ படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார்.

நடிப்பு தவிர்த்து ‘தெறி’, ‘காக்கிசட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார். மேலும் பல்வேறு பாடல்களையும் அருண்ராஜா பாடியுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018ஆம் ஆண்டு ‘கனா’ படத்தை இயக்கினார்.

இந்நிலையில் அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.

இந்நிலையில் தான் அருண்ராஜா காமராஜும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவது தெரிய வந்துள்ளது. அவரின் நிலைமை சீராக இருக்கிறதாம். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.