சென்னை: உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரையில் ஓட்டு விழுவதாக எந்த புகாரும் வரவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து வருகின்றனர். சில வாக்குச்சாவடிகளில் திமுகவுக்கு வாக்களித்தால் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் வாக்குகள் பதிவாகின்றன என்று புகார்கள் எழுந்தன.
இந் நிலையில் வாக்குப்பதிவு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை என்று கூறி உள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:
சின்னம் மாறி வாக்கு விழுவது தொடர்பாக புகார் வரவில்லை. நாங்கள் விசாரித்த வரை அதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த சின்னத்தை அழுத்துகிறீர்களோ அங்குதான் ஓட்டு விழும். சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தது. அனைத்தும் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மாலை 6 மணி வரை வாக்களிக்க வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும். அதன் பின்னர் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும். அவர்களிடம் பிபிஇ கவச உடை இல்லை என்றால் தேர்தல் ஆணையம் அவற்றை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.