ஈரோடு: புதுக்கோட்டை, ஈரோடு பகுதிகளில் பல இடங்களில் அதிமுகவினர் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பண நாட்டம் அதிகரித்துள்ளதால், வருமான வரித்துறையினர் பல இடங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றனர். நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக ஊராட்சி செயலர் உள்பட 5 பேர் வீடுகள் மற்றும் ஈரோடு பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக ஊராட்சி செயலர் துரை உள்பட 5 பேர் வீடுகளில் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் வழங்க வீட்டில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம்மாள் வீட்டில் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோப்பூரில் அதிமுகவினருக்கு சொந்தமான பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுகவை சேர்ந்த 13 பேர் நடத்தி வந்த தனியார் பள்ளியில் திடீரென வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. பள்ளியில் பணப்பட்டுவாடா செய்வது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.