சென்னை
மறைந்த பாஜக அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி குறித்து தவறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக புகார் அளித்துள்ளது.
வரும் ஆறாம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் வேட்பாளரும் திமுக இளைஞர் அணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரையில் மத்திய பாஜக அரசு தனது அமைச்சர்களுக்கு கடும் மன உளைச்சல் அளித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் இந்த மன உளைச்சல் காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் மரணம் அடைந்ததாகவும் அவர் தனது பரப்புரையில் கூறினார்.
உதயநிதியின் இந்த உரைக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுஷ்மா ஸ்வராஜ் மகள் மற்றும் அருண் ஜெட்லியின் மகன் ஆகியோர் தேவை இல்லாமல் மறைந்த தங்களின் பெற்றோர்களை உதயநிதி தவறாகப் பேசுவதாக வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக தேர்தல் ஆணையத்துக்கு உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவரை திமுக நட்சத்திர வேட்பாளர் அந்தஸ்தில் இருந்து நீக்கி அவர் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.