பழனி
பிரதமர் மோடியின் உதவியால் அதிமுக இந்த தேர்தலில் டெபாசிட் இழக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார்.
நேற்று போடியில் தனது பிரசாரத்தை முடித்துவிட்டு பழனி செல்லும் வழியில் திடீரென ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் இறங்கி நடந்து மக்களிடையே வாக்கு சேகரித்துள்ளார். பகல் சுமார் 1 மணிக்கு கடும் வெயிலில் அவர் அரை மணி நேரம் நடந்து சென்று பிரசாரம் செய்தார். அங்குக் கூடியிருந்த பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அதன் பிறகு பழனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு க ஸ்டாலின், ” திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர் ஆவர் . பஃபூன்கள் சர்க்கஸ் நிகழ்ச்சியில் சிரிக்க வைப்பது போல திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் பொய் என்று ஒத்துக்கொண்டுள்ளார். அமைச்சர் சீனிவாசனால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்தவொரு பயனும் கிடையாது.
தமிழக அரசு திண்டுக்கல் நகரை மாநகராட்சியாக உயர்த்தியும் மாநகராட்சிக்கான எவ்வித பணியும் அவர் மேற்கொள்ளவில்லை. ஆனால் குடிமராமத்துப் பணியில் பணத்தை கொள்ளையடித்ததுதான் மிச்சம், எனவே திண்டுக்கல் சீனிவாசனை வீட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும்.
தற்போது கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு என்று சாதகமாக வந்தாலும் திமுகவினர் பணி செய்யாமல் இருந்துவிடக்கூடாது. ஏன் என்றால் அதிமுகவினர் வெற்றிபெற்றால் அதிமுகவினராக இருக்கமாட்டார்கள், பாஜகவினராக தான் இருப்பார்கள். அதற்கான உதாரணம் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் தான். ஆகவே அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காத அளவிற்கு தேர்தல் பணிசெய்யவேண்டும்.
பிரதமர் மோடியும் அதற்கு நமக்கு உதவி செய்கிறார். பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான் கிடைக்கிறது. பிரதமர் மோடி தாராபுரம் வந்து உண்மையை சொல்லாமல் பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார். மோடி உண்மையைத் தெரிந்து பேச வேண்டும். பிறர் எழுதிக் கொடுத்ததை எல்லாம் பேசிச்சென்றால் அவர் பிரதமர் கிடையாது.
பெண்களுக்கு திமுகவில் பாதுகாப்பு இல்லை என்ற மோடிக்குப் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் விவகாரம் தெரியாதா?. இவை எல்லாம் பிரதமராக இருக்கும் மோடிக்குத் தெரியாதா?. நமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவினரின் ஊழலைக் கண்டுபிடித்து மக்களிடம் அம்பலப்படுத்துவது தான் ஸ்டாலினின் முதல் வேலை.
வரும் சட்டமன்ற தேர்தலில் 234தொகுதியிலும் திமுகதான் வெற்றிபெறும். எதிர்க்கட்சி வரிசையில் கூட அதிமுகவால் உட்காரமுடியாது. அதிமுக இந்த தேர்தலுடன் முடிவுக்கு வந்து விட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் இயற்றப்படும், திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே தமிழகத்தின் சுய மரியாதையை, தன்மானத்தைக் காப்பாற்றும் நமது நோக்கம் நிறைவேறும்” என உரையாற்றி உள்ளார்.