சென்னை: தமாகாவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் விலகி உள்ளார். கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டியிதுடன், சுயேச்சையாக போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வால்பாறை சட்டசபை தொகுதியை பெற வேண்டும் என்று தீவிரமாக முயன்றது. அதிமுகவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கோவை தங்கம் இத்தொகுதியில் போட்டியிட விரும்பியதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அதிமுக அந்த தொகுதியை தமிழ் மாநில காங்கிரசுக்கு விட்டு தரவில்லை. அந்த தொகுதியில் அமுல் கந்தசாமி போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்தது. அதனால் அதிருப்தியடைந்த தமாகா மூத்த தலைவரான கோவை தங்கம் வால்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின,

இந் நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த கோவை தங்கம்,  தமாகா துணைத்தலைவர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன். திமுகவில் சேரும் எண்ணம் தற்போதில்லை. நாளை வரலாம். தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு எனக்கு தகுதி இல்லை. வால்பாறை தொகுதி எனக்கு கிடைக்காததற்கு அமைச்சர் வேலுமணி தான் காரணம்” எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து  வால்பாறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்து உள்ளார்.