சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு திமுக போட்ட மேல்முறையீட்டு வழக்கு தான் காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவது திட்டமிட்ட பொய் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி என்.ஆர். இளங்கோ ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

திமுக மீது தேவையில்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதா மீதான வழக்கை 1995ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரை திமுக சட்டரீதியாக மேற்கொண்டது. தேர்தல் ஆதாயம் கருதி திமுக தலைவர் மீதும், கலைஞர் மீதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவதூறு பிரச்சாரம் செய்கிறார்.

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஜெயலலிதா மீதான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பாமக வலியுறுத்தியது. ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசை வலியுறுத்தியது பாமக தான்.

2015ம் ஆண்டு மே 14ம் தேதி அப்போதைய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை பாமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தினர். தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி திமுக மீது பொய் புகார் கூறுகிறார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை வெளியிடவிடாமல் தடுப்பது எந்த சக்தி? என்றும் கேள்வி எழுப்பினர்.