உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டையில் பொதுக்கூட்டத்தை ரத்து செய்து கமல்ஹாசன் பேசாமல் சென்றதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாகின்றன. வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வருவதால் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் களம் இறங்கி உள்ளன.

தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமக, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழகம் முழுவதும் தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந் நிலையில் உடுமலைப்பேட்டையில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுவதாக இருந்தது. ஆனால் அந்த பொதுக்கூட்டத்தை ரத்து செய்து கமல்ஹாசன் பேசாமல் சென்றதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரச்சாரத்துக்காக ஹெலிகாப்டரில் உடுமலை வந்த கமல்ஹாசன் அங்கு போதிய கூட்டம் இல்லாததால் பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அவர் திடீரென பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்றதால், தொண்டர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.