சென்னை: ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜூன மூர்த்தி, ரஜினி அரசியலுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்ததுடன், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து ரஜினி ரசிகர்களை தனது கட்சிக்கு இழுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள ஓட்டலில் நடந்தது. இதில், கட்சித் தலைவர் அர்ஜுனமூர்த்தி பங்கேற்று, கட்சியின் தேர்தல் சின்னமான ரோபாவை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:
தமிழகத்தை 4 மண்டலமாக பிரித்து 4 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள்.
குடும்பஅட்டைதாரர்களுக்கு தினமும் 500 மி.லி. முதல் 1 லிட்டர் வரைஇலவச பால் வழங்கப்படும்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேருந்து பயண அட்டையுடன் பெட்ரோல் அட்டை வழங்கப்படும்.
இந்த அட்டையை பயன்படுத்தினால், மாநில அரசின் விற்பனை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
10-ம் வகுப்பு வரை விவசாயப் பாடம் கட்டாயம்.
60 வயதை கடந்து பொது வாழ்வில் இருப்பவர்களை கவுரவிக்க நல்லோர் குடியிருப்பில் வீடு வழங்கப்படும்.
தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் விவசாயம் என்ற ஸ்மார்ட்விவசாய திட்டம் செயல்படுத்தப்படும்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இலவச போக்குவரத்து வசதி,
இரவு நேர பேருந்து பயணத்தில் போலீஸ் பாதுகாப்பு உள்பட ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆசை ஒழிந்தால்தான் ஊழலைஒழிக்க முடியும். நாங்கள் ஆட்சிக்குவந்தால் ஊழலை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுப்போம்.
செல்போன், காலணி, துடைப்பம் ஆகிய சின்னங்களை கேட்டேன். அதிர்ஷ்டவசமாக ரோபோ சின்னம் கிடைத்துள்ளது.
வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. நான் 4 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். அதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவேன்.
தற்போது தமிழக அரசியலில் பணம் ரீதியாக சண்டை நடப்பதால், சிறிய கட்சிகள் வளர சிரமப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.