கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று கோவை வந்தடைந்தார். கோவை விமானம் நிலையத்தில் இருந்து ராகுல் செல்லும் பாதை முழுவதும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பி.யுமான  ராகுல்காந்தி இன்றுமுதல் 3 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கோவை வந்தடைந்தார்.  “ராகுலின் தமிழ் வணக்கம்” என்ற பெயரில் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் சுற்றுப்பயணம் செய்யும் ராகுல்காந்தி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், சிறுகுறு தொழில்அதிபர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து உரையாடுகிறார். 

இன்று காலை 8.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட ராகுல் காந்தி, நண்பகல் 11 மணி அளவில் கோவை வந்தடைந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் விமான நிலையத்தில் ராகுல்காந்தியை வரவேற்றனர்.

பொதுமக்களிடையே பேசிய ராகுல்காந்தி, தமிழகத்தற்கு வருவது தனக்கு மகிழ்ச்சியானது என்று கூறியவர், தமிழ் கலாச்சாரத்ம் மற்றும் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்றார். தமிழ் மக்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருப்பதாக கூறியவர்,  இந்தியாவில் தமிழ் மக்களை  பிரதமர் மோடி இரண்டாம் தரமாக கருதுவதாகவும், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற முயற்சியைத் எதிர்த்து நாம் போராட வேண்டியது இருப்பதாக கூறியவர், அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும் என்றார்.  வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை மோடி அரசு வஞ்சித்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

3 நாட்கள் தமிழகத்தில் முகாமிடும் ராகுல்,  சுமார் 200 கி.மீ தூரம் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து, ஆதரவு திரட்டுகிறார். 

மதியம், சிறு, குறு தொழில்முனைவோருடன் சுகுணா அரங்கில் மதிய உணவுடன் கலந்துரையாடுகிறார். அதையடுத்து,  மாலை அவினாசி வருகிறார். பின்னர்,   மாலை 4.10 மணிக்கு அனுப்பர்பாளையம் வரும் அவருக்கு காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கும் ராகுல்காந்தி பிரசாரம் செய்கிறார். இரவு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

தொடர்ந்த, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3 நாட்கள் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.