சென்னை:
சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கல்வி தொலைக்காட்சியில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் ஒளிபரப்பானதால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் இருந்ததற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, டிடிவி தினகரன், தி.க தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கல்வி தொலைக்காட்சியில் காவி உடையில் ஒளிபரப்பான திருவள்ளுவர் புகைப்படம் தொடர்பாக இன்று பள்ளிகல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. அத்துடன் சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கல்வித் தொலைக்காட்சியில் காவி நிறத்தில் திருவள்ளுவர் படம் வந்ததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. அது தவறுதலாகவே ஒளிபரப்பானது. அரசின் கவனத்திற்கு வந்த பிறகு உடனடியாக காவி நிறம் உடை மாற்றப்பட்டுவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.