திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் கேரளா சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி மறுத்து விட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 27வது நாளாக வடமாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலகட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டது. சட்டத்தை வாபஸ் பெறாமல் போராட்டத்தை திரும்ப பெற முடியாது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துவிட்டன.
இந் நிலையில் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கேரள சட்டசபை சிறப்புக் கூட்டம் நாளை கூடுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த கூட்டத்தை கூட்ட, ஆளுநர் ஆரிப் முகமது கான் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். சிறப்புக் கூட்டத்தை கூட்ட அமைச்சரவை எடுத்த முடிவானது ஆளுநரிடம் பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சட்டசபையை அவசரமாக கூட்டுவதன் அவசியம் பற்றி ஆளுநர் விளக்கம் கேட்க, முதல்வரும் பதிலளித்துள்ளார். இருப்பினும் சிறப்பு கூட்டத்தை கூட்ட ஆளுநர் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.