நெல்லை: கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்ட குற்றால அருவியில் பொதுமக்கள் குளிக்க சுமார் 9 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து குற்றால அருவிகளில் பொதுமக்கள் ஆனந்தக் குளியல் போட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியான, சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வந்ததது. பின்னர், கடந்த நவம்பர் மாதம் 30ந்தேதி தமிழகஅரசு வெளியிட்ட பொது ஊரடங்கு, தளர்வுகள் குறித்த அறிவிப்பின்போதுரு, 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி டிசம்பர் 14ம் தேதி சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டது.
இதையடுத்து குற்றால அருவியில் இன்றுமுதல் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பருவமழை காலம் என்பதால், குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அரசு அனுமதி வழங்கிய நிலையில், அதிகாலை முதலே ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.
தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும் ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, குற்றாலம் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், அதை நம்பி வாழ்ந்து வந்த சிறுவியாபாரிகள் உள்பட பலரது வாழ்க்கையும் கேள்விக்குறியானது.
இந்த நிலையில், தற்போது அரசு அனுமதி அளித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் குற்றாலாம் நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வந்ததன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. இன்று காலை முதலே ஏராளமானோர் குற்றால அருவியில் ஆசைத்தீரவும், ஆர்ப்பாட்டமாகவும் குளித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.