சென்னை: நேற்று மாலை நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (டிசம்பர் 14) மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10.45 வரை நடைபெற்றதாகவும், அனைவரும் கூட்டம் முடிந்து செல்ல 12 மணி ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், 2021 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் பிரசாரம், கூட்டணி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் 31 மண்டலப் பொறுப்பாளர்கள், 73 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோருடன் அவைத் தலைவர் மதுசூதனனும் கலந்துகொண்டார்.

தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை விரைவுபடுத்தவும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கவும், தொகுதி வாரியாகக் கள நிலவரத்துக்கு ஏற்றாற்போல் பிரச்சார உத்திகளை வகுக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொதுவான அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைகளுக்கு  பிறகுமதுசூதனன், உடல்நலத்தை கருத்தில்கொண்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, மண்டல வாரியாக நிர்வாகிகளை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சந்தித்தனர். அந்தந்த மண்டலப் பொறுப்பாளர், மண்டலத்துக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே  கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த ஆலோசனையின்போது, ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை எத்தனை, பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களை எழுத்துபூர்வமாகக் கேட்டுப் பெற்றதாகவும், ஒவ்வொரு பூத்திலும் 75 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியில் பெண்கள் 25 பேர் இருக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டபடி பெண்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு மண்டலாக நடந்த இந்த ஆலோசனை முடியவே இரவு 10.45 ஆகிவிட்டது. அதையடுத்து, இந்த மாத இறுதிக்குள் பூத் கமிட்டிப் பட்டியலை துல்லியமாகத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து பேசிய  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாம ஆட்சியைத் தக்கவைக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ஆட்சிக்கு வந்தால்தான் பிரச்சினை இருக்காது. தோத்தோம்னா எல்லாருக்கும் பிரச்சினை என்பதை ஞாபகத்தில் வெச்சிக்கங்க. தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்குதோ அவங்களை வெற்றிபெற வைக்க வேண்டியது கடமை.  அப்பதான் நாம நாளை நல்லா இருக்கலாம் என்று பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.