சென்னை: சென்னை விமான நிலைய வரவேற்பை தொடர்ந்து காரில் ஏறிய அமித் ஷா, விமான நிலையம் அருகே தொண்டர்கள் வரவேற்பு கொடுத்ததைத் தொடர்ந்து, சாலையில் இறங்கி நடந்துகொண்டே வரவேற்பை ஏற்றார். அப்போது சாலையோரத்தில் இருந்து அவரை நோக்கி பதாகை வீசப்பட்டது. இதைகண்ட காவலர் ஒருவர் அந்த பதாகையை தடுத்த நிலையில், பதாகை வீசியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அமித்ஷா மதியம் 2 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, சிவி சண்முகம், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இருந்தனர். மேலும் மாநில பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
விமானநிலையத்திலிருந்து எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டல் சென்றார். அப்போது வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சாலையோரம் இருந்த பாஜக தொண்டர்களை பார்த்த அமித்ஷா காரிலிருந்து இறங்கியவர் அவர்களை நோக்கி கை அசைத்தவாறு சாலையில் நடந்து சென்று உற்சாகப்படுத்தினார்.
அப்போது சாலையோரத்தில் இருந்து அமித்ஷாவை நோக்கி பதாகை வீசப்பட்டது. இதைக்கண்ட காவலர் அந்த பதாகையை தடுத்த நிலையில், பதாகை வீசிய நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நங்கநல்லூரைச் சேர்ந்த துரைராஜ் (வயது 60) என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. துரைராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித்ஷா அங்கிருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கலைவாணர் அரங்கத்திற்கு வருகிறார். அங்கு திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ 380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.
Thanks: Video courtesy ANI