சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமான நிலையில், இயற்கை அன்னையும் மழைபொழிந்து கண்ணீருடன் தனது அஞ்சலியை செலுத்தி வருகிறது. சென்னையில் கடந்த ஒரு மணி நேரமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பெரும்பாலான இந்திய மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். நாடே கொரோனாவால் பீதியுடன் இருந்தபோது, மக்களிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பாடல் வெளியிட்டு, உற்சாகப்படுத்தியவர்.
துரதிருஷ்டவசமாக கடந்த ஆகஸ்டு மாதம் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து, ஆகஸ்ட் 5-ம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு காலமானார்.
அவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல மாநில முதல்வர்கள், அரசியல் கட்சியினர் அனைத்து மாநில திரையுலக பிரமுகர்களும் கண்ணீர் அஞ்சலியுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எஸ்பிபியின் மறைவுக்கு, இயற்கை அன்னையும் தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகிறது. எஸ்.பி.பி.யின் உடல் இன்று மாலை 4 மணி அளவில் அவரது இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் எடுத்துச்செல்லப்பட்டது. அடுத்த சில நிமிடங்கள் முதல் சென்னையின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
பாடும் நிலா பாலுவின் மறைவுக்கு இயற்கை அன்னையே தனது கண்ணீர் அஞ்சலியை மழையாக பொழிந்து வருகிறார்போலும்…