சென்னை: தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 9-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையிலும் தடுப்பூசி முகாம்கள் காலை 7மணிக்க தொடங்கி நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் தினசரி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து, லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை வாரம் ஒருநாள் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் இந்த வாரம் முதல் வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு இரு நாட்கள் நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இதுவரை 8 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.  மேலும்,  வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், இன்று 9வது தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும். கொட்டும் மழையிலும்  50 ஆயிரம் முகாம்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2ஆயிரம் முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தமுகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசிகள் போடப்படுகிறது. பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே வாரத்தில் 2 நாட்கள் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தயங்காமல் வந்து தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 73 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 35 சதவீதத்தினர் 2-ம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் ஒரு கோடி 75 லட்சம் தடுப்பூசிகள் இன்னும் கையிருப்பில் உள்ளன.