மும்பை,
இந்திய தொலைத்தொடர்பு வரலாற்றில் அதிரடி சலுகைகள் மூலம் முதலிடத்தை பெற்றுள்ளது முகேஷ் அம்பானியின் ஜியோ.
கடந்த ஆண்டு முகேண் அம்பானி ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்தி முதல் மூன்று மாதம் இலவச சேவையை அளித்தார். தொடர்ந்து மேலும் 3 மாதம் இலவச சேவை அளித்து வாடிக்கையாளர்கள் தன் வசப்படுத்தினார்.
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்த சலுகைகள் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைய இருப்பதால், தற்போது புதிய சலுகை ஒன்று இன்று அறிமுகப்படுத்தி உள்ளார்.
அதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் மார்ச் 31ந்தேதிக்குள் 99 ரூபாய் மட்டும் செலுத்தினால் அடுத்த ஆண்டு மார்ச் 31ந்தேதி வரை ஜியோவின் சலுகைகளை மேலும் ஒரு ஆண்டு பெறலாம் என அதிரடியாக அறிவித்து உள்ளார்.
இன்று புதிய திட்டங்களை அறிவித்து முகேஷ் அம்பானி கூறியதாவது,
ஜியோவின் வாடிக்கையாளர்களாக 10 கோடி பேர் உள்ளனர் என்றும், ஜியோவின் பிரதம வாடிக்கையாளர்கள் மேலும் ஒரு வருடம் 4ஜி சேவையை பெற ரூ.99 மட்டும் செலுத்தினால் போதும். இ ந்த ஆண்டு மார்ச் மாதம் செலுத்தி தங்களது சேவையை உறுதிபடுத்தினால், அடுத்த ஓராண்டுக்கு இலவச சேவை மேலும் நீடிக்கும் என்றும் அறிவித்து உள்ளார். அதாவது அடுத்த ஆண்டு மார்ச் 31 (2018 மார்ச் 31) தேதி வரை எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இதற்கான பதிவு மார்ச் 1ந்தேதி தொடங்கி மார்ச் 31ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு மார்ச் 31ந்தேதிக்கு முன்னர் ஜியோ வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த சலுகையை பெறலாம்.
ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மைஜியோ ஆப் மூலமாகவும் பதிவு செய்யலாம் என அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து முகேஷ் அம்பானி கூறியதாவது,
ஜியோ கடந்த 170 நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இதற்கு நன்றி சொல்ல நான் கடமை பட்டவனாவேன். தொடர்ந்து ஜியோவின் சேவை கிடைக்கும் என்றார்.
கடந்த 170 நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்கள் பெற்று இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமாக உயர்ந்துள்ளது. அதேபோல் டேட்டா உபயோகிப்பதில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பெற்றுள்ளது. இதுவரை 100 கோடி அளவுக்கு டேட்டா உபயோகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.