சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன்களில்  97.05%  பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் பெரியசாமி கூறினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு சங்கங்களில் 5 சவரனுக்கு கீழ் நகைக்கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.  அதைத்தொடர்ந்தே ஏராளமானோர் நகைக்கடன் பெற்றுள்ளது தெரிய வந்தது. .  தொடர்ந்து, ஆட்சிக்கு வந்ததும், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியதுடன், பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இது ஏழை மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நகைக்கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறிய தமிழகஅரசு, அது தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்து ஆய்வுகள் செய்து வந்தது. அதைத்தொடர்ந்து நகைக்கடன் பெறும் தகுதியானவர்கள் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டு, அவர்களுக்கு நகைக்கடன்களை வழங்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியசாமி, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 97.05% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரூ.5,200 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய திட்டமிட்டு அதில் 97.05 % கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று கூறியவர்,  இன்னும் ஒரு வாரத்தில் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்துள்ளார்.