ஊட்டி:

டந்த 24 மணி நேரத்தில் ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில்  911 மி.மீட்டர் அளவிலான மழை கொட்டியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கேரளா, கர்நாடகாவில் பருவமழை காரணமாக மழை கொட்டி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியான நீலகிரி மாவட்டத்திலும் வரலாறு காணாத அளவு மழை கொட்டி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பலத்த காற்றுடன் பேய் மழை கொட்டுவதால் பல இடங்களில் நிலச்சரி ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  ஊட்டி – மைசூரு சாலையில் சாண்டி நல்லா பகுதியில் மரம் சரிந்து  சாலையில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  ஊட்டி-கூடலூர் சாலையில் தவளை மலை, ஊசி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரம் மற்றும் மரக்கிளைகள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர் மழை காரணமாக  கூடலூரை அடுத்துள்ள மங்குழி வழியாக ஓடும் பாண்டியாற்றின் கிளை நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக,, இந்த ஆற்றின் மீது கட்டப்பட்டு உள்ள பழமையான பாலத்தின் சுவற்றில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள  குந்தா, கெத்தை, பைக்காரா, அப்பர் பவானி, அவலாஞ்சி உள்பட 12 அணைகள்  நிரம்பி வருகின்றன. பார்சன் வேலி அணையில் இருந்து ஊட்டிக்கு குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. இந்த பகுதியில் மின்சார கம்பி மீது மரம் விழுந்துள்ளதால் ஊட்டிக்கு குடிநீர் சப்ளை 2 நாட்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் கடும் குளிர் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சுற்றுப்பயணிகள் வருகை அடியோடு குறைந்துள்ளதால்,  ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம்  வெறிச்சோடி காணப்படுகிறது.

ஊட்டியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ள அவலாஞ்சி பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை கொட்டி உள்ளது. ஊட்டியில் இருந்து மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ள வழியில்தான் எமரால்டு வனத்தில்  அவலாஞ்சி ஏரி உள்ளது.  பசுமையின் குவியலாய்த் தோற்றமளிக்கும் பள்ளத்தாக்கும் குளிர்ந்த நீர்த்தேக்கங்களும் உள்ள இந்த பகுதியில் அதிக பட்ச மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

அதிகபட்சமாக அவலாஞ்சியில் 40 செ.மீ.மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1374 மில்லி மீட்டரும், சராசரியாக 80.82 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

நேற்று முன்தினம் 820 மி.மீ. அளவுக்கு மழை பொழிந்த நிலையில், நேற்று 911 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.  கடந்த 72 மணி நேரத்தில் அங்கு பதிவான மழை 2136 மி.மீ அளவுக்கு மாமழை பொழிந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பதிவாகி உள்ள மழையின் அளவு:

ஊட்டி -50 மி.மீ., நடுவட்டம்-119 50 மி.மீ., கல்லட்டி- 18 மி.மீ., கிளன் மார்கன்-101 மி.மீ.,  குந்தா-46 மி.மீ.,  அவலாஞ்சி-405 மி.மீ., எமரால்டு-103 மி.மீ., கெத்தை -10 மி.மீ., கின்னகொரை-12 மி.மீ., அப்பர் பவானி-220 மி.மீ., குன்னூர்-17 மி.மீ., பர்லியாறு- 15 மி.மீ. , கேத்தி-11 மி.மீ., கோத்தகிரி -30 மி.மீ., கொடநாடு-14 மி.மீ., கூடலூர்-97 மி.மீ., தேவாலா-106 மி.மீ..