சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் இதுவரை 91 செ.மீ மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்து உள்ளார். மேலும்,  5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று ம் கூறியுள்ளார்.

குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் இந்த ஆண்டு (2021) நவம்பர் 1ந்தேதி முதல் இன்று வரை 91 செ.மீ மழை மட்டுமே பதிவாகி உள்ளது. ஆனால், கடந்த 2015ம் ஆண்டு மழை வெள்ளம் ஏற்பட்டபோது, நவம்பர் மாதத்தில் 102 செ.மீ மழை பதிவானது, அதுவே இதுவரை பெய்த மழையில் அதிக பட்சம் என்று சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் தற்போது பெய்துவரும் மழை மற்றும் வெள்ளப்பாதிப்பு கடந்த 2015ம் ஆண்டை விட அதிகம் என கூறப்பட்டு வரும் நிலையில், மழை அளவை சுட்டிக்காட்டி வானிலை மைய இயக்குனர்  புவியரசன் விளக்கமளித்துள்ளார்.

மேலும் மழைகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலு டன் கூடிய கனமழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். குமரிக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்”.

இவ்வாறு கூறியுள்ளது.