சென்னை

சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒரு மணி நேரத்தில் 45 வகை உணவுகள் சமைத்து உலக  சாதனை படைத்துள்ளார்.

சென்னை நகரில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ ஐந்தாம் வகுப்பு மாணவி ஆவார்.  தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவரது பள்ளியும் மூடப்பட்டு அவரும் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகிறார்.   மற்ற சிறுவர் சிறுமிகளைப் போல் இவருக்கும் மிகக் குறைந்த நேரமே வகுப்புக்கள் நடந்து வருகின்றன.

இதையொட்டி வகுப்புக்கள் இல்லாத நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்க இவர் தனது தாயிடம் சமையல் கலையைக் கற்றுள்ளார்.   முதலில் சிறு சிறு உதவிகள் செய்து வந்த லட்சுமி சமையல் நுணுக்கங்களை வேகமாக கற்றுப் பல உணவுகளைச் சமைக்கத் தெரிந்துக் கொண்டுள்ளார்.   அவரது ஆர்வத்தைக் கண்ட அவர் தாய் யுனிகோ சாதனை முயற்சியில் தனது மகளை ஈடுபடுத்தி உள்ளார்.

சென்னையில் நடந்த இந்த சாதனை முயற்சியில் கலந்துக் கொண்ட லட்சுமி ஒரு மணி நேரத்தில் 45 உணவு வகைகளைச் சமைத்துக் காட்டி உள்ளார்.  அவர் தமிழர்களின் பாரம்பரிய உணவான கம்பு தோசை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு போன்றவை மட்டுமின்றி, சிறுதானிய கொழுக்கட்டை, அசைவ உணவுகளான மீன் வறுவல், இறால் வறுவல், சிக்கன் 65 எனப் பலவகைகளிலும் சமையல் செய்து அசத்தி உலக சாதனை படைத்து யுனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம்  பிடித்துள்ளார்.